இயற்கையைக் கண்டு ரசித்து, வணங்கி,வாழ்த்தி
இயற்கையின் சீற்றமாய்ப் புயல்,மழை வரினும்
இயன்றவரைத் தடுக்கும், இல்லையேல் ஏற்கும்
இயல்பு மனிதனாய் வாழும் அமெரிக்க மண்ணில்
இப்புவிவெப்பம் உயர்ந்திடும் வழியாய்
இல்லம்தோறும் இருந்திடும் வழிகள் பலப்பல.
இருப்பினும் அவனே இடமுள்ள இடத்தில்
இருந்திடும் வகையாய் வளர்த்தான் மரங்களை.
வாடிய பயிர் கண்டு வாடிய வள்ளலார் போல்
வீழும் மரத்தை வேரோடு எடுத்து
வேறொரு பக்கமாய் வேர் பதிய வைத்தான்
வீழ்ந்த இடத்தில் புதிதாய் நட்டான்
மரங்களும் மகிழ்ந்து தன்நன்றி காட்ட
மண்மீது நிழலைப் பரப்பி மகிழ்வித்து
மழை வேண்டி பூசைகள் செய்யாதபோதே
மழையைப் பொழிய வழிவகை செய்ததே.
பெற்றவர் மகிழ்ந்திட வளரும் குழந்தையாய்
பெறாத பிள்ளையாய் வளர்ந்தன மரங்கள்.
பேணி வளர்த்தவன் பயனுறும் வகையாய்
பேதமின்றி உதவி பெரிதாய் வளர்ந்தன.
தனி வீதி தனிலே தனித்தனி மரங்களாய்
வழிநெடுகிலும் அடர்ந்த காடாய்
வானைத் தொடவே கைகள் நீட்டியே
பச்சைப் போர்வையாய் படர்ந்து விரிந்ததே.
வன்பனி வந்து வாட்டிடும் முன்னர்
முன்னிருந்து மூடிய பச்சிலை உதிர்ந்து
தன்னுடம்பின் வெற்றுநிலை காட்டிடும் முன்னே
வண்ணங்கள் பலவாய் மாறின மரங்கள்.
பச்சை,சிவப்பு,ஆரஞ்சு என்றும்
பச்சையில் பலவகை உண்டென உணர்த்தி
ஓவியன் எவனும் வரையா ஓவியமாய்
ஒவ்வொரு நொடியும் ஒருநிறம் காட்டி
அழகும் ஆட்டமும் ஒருநாள் ஓயுமென்பதால்
அனைத்து வண்ணமும் நொடியில் உதிர்ந்து
வெற்றுடம்பு காட்டி வெண்பனி ஏற்று
தன்னுடல் மூடி தவம் போல் காத்து
காலமது மாறி கதிரவன் நெருங்க
வசந்தம் வந்ததும் மீண்டும் பூத்தன.

