Sunday, October 17, 2010

நன்றி மறவாத நன்மக்கள்


இயற்கையைக் கண்டு ரசித்து, வணங்கி,வாழ்த்தி
இயற்கையின் சீற்றமாய்ப் புயல்,மழை வரினும்
இயன்றவரைத் தடுக்கும், இல்லையேல் ஏற்கும்
இயல்பு மனிதனாய் வாழும் அமெரிக்க மண்ணில்
இப்புவிவெப்பம் உயர்ந்திடும் வழியாய்
இல்லம்தோறும் இருந்திடும் வழிகள் பலப்பல.
இருப்பினும் அவனே இடமுள்ள இடத்தில்
இருந்திடும் வகையாய் வளர்த்தான் மரங்களை.
வாடிய பயிர் கண்டு வாடிய வள்ளலார் போல்
வீழும் மரத்தை வேரோடு எடுத்து
வேறொரு பக்கமாய் வேர் பதிய வைத்தான்
வீழ்ந்த இடத்தில் புதிதாய் நட்டான்

மரங்களும் மகிழ்ந்து தன்நன்றி காட்ட
மண்மீது நிழலைப் பரப்பி மகிழ்வித்து
மழை வேண்டி பூசைகள் செய்யாதபோதே
மழையைப் பொழிய வழிவகை செய்ததே.

பெற்றவர் மகிழ்ந்திட வளரும் குழந்தையாய்
பெறாத பிள்ளையாய் வளர்ந்தன மரங்கள்.
பேணி வளர்த்தவன் பயனுறும் வகையாய்
பேதமின்றி உதவி பெரிதாய் வளர்ந்தன.

தனி வீதி தனிலே தனித்தனி மரங்களாய்
வழிநெடுகிலும் அடர்ந்த காடாய்
வானைத் தொடவே கைகள் நீட்டியே
பச்சைப் போர்வையாய் படர்ந்து விரிந்ததே.

வன்பனி வந்து வாட்டிடும் முன்னர்
முன்னிருந்து மூடிய பச்சிலை உதிர்ந்து
தன்னுடம்பின் வெற்றுநிலை காட்டிடும் முன்னே
வண்ணங்கள் பலவாய் மாறின மரங்கள்.

பச்சை,சிவப்பு,ஆரஞ்சு என்றும்
பச்சையில் பலவகை உண்டென உணர்த்தி
ஓவியன் எவனும் வரையா  ஓவியமாய்
ஒவ்வொரு நொடியும் ஒருநிறம் காட்டி
அழகும் ஆட்டமும் ஒருநாள் ஓயுமென்பதால்
அனைத்து வண்ணமும் நொடியில் உதிர்ந்து
வெற்றுடம்பு காட்டி வெண்பனி ஏற்று
தன்னுடல் மூடி தவம் போல் காத்து
காலமது மாறி கதிரவன் நெருங்க
வசந்தம் வந்ததும் மீண்டும் பூத்தன.



Monday, October 4, 2010

நாலெட்டு (4X8)

ஜனனத்தில் இல்லை
   முற்றி முதிர்ந்த மரணத்திலும் இல்லை
பால்குடியில் இல்லை
   பாலூற்றுகையில் இல்லை

தாய்ப்பால் மறுக்கப்பட்டதும்
   முதலில் முளைத்தது பால்பற்கள்

பொக்கை வாயினில்
  புன்னகையாய்ப் பூத்தவை
முதலிரண்டு பற்கள்
   கீழ்பற்கள் இரண்டெனில்
மேலேயும் இரண்டு

இரண்டு ஒன்று மூன்று இரண்டென
            (2132)
பக்கத்திற்கு எட்டாய்
    நாற்புறமும் முளைக்க
முப்பத்தியிரண்டையும்
    கணக்காய் அழகாய்ப்
பெற்றவர் சிலரே !

முளைத்தது விழுவதும்
   விழுந்தப் பின் முளைப்பதும்
பற்களின் சிறப்பு.

விழுந்தது முளைத்த பின்
விழுவதும் இயல்பே !!

மேல் பதினாறும் கிழ் பதினாறும்
பொருந்தவே அமைதல்
ஜீனின் பெருமை.

கிழிக்கவும் குத்தவும்
நறுக்கவும் சிலச் சில

நொறுங்கா உணவையும்
நொறுங்கவே மென்று
நூறாண்டு வாழ உதவிடும் எந்திரன்

சொற்களை வெளிவிடும்
அரணாய்ப் பற்கள்
பற்கள் போனபின்
மொழியிழந்திடும் சொற்கள்

கோபத்தை வெளியில் காட்டி மிரட்டவும்
கோபத்தைக் கடித்து அடக்கவும் பற்கள்

புன்னகைப் பிறக்கக் கருவறை திறக்க
புதிதாய்ப் பூத்ததாய்ப் பளீரிடும் பற்கள்

விலங்கிலிருந்து வந்தவன் மனிதனென
விளக்கிடும் விஞ்ஞானச் சான்றாய் பற்கள்
விதைத்தவன் யாரென அறியவும் பற்கள் :)

காக்க ! காக்க !

                                                         காக்க ! காக்க !

                                      உடல் நலம் காக்க உன் நா நீ காக்க !
                                      உள நலம் காக்க காந்தி வழி காக்க !

இதுவும் சுடும் !!!

பட்டால் தெரியும் நெருப்பு சுடுமென்று
ஒருமுறைப் பட்டாலும் இருமுறை வெந்தாலும்
மனதிற்குத் தெரிவதில்லை காதல் சுடுமென்று.

நீயுமா?

உன் வீடு நோக்கிக்
          காலடி வைத்தேன்
உன் சுவாசம் வந்தது
           என் வீடு நோக்கி !!!

உயிரியம் !!!

தமிழின் 'ழ'வின் சிறப்பென்ன?
           அதன் உருவா ! ஒலியா !
'த' என உச்சரிக்க உள் நா கிளம்பி
           மேலண்ண நுனியை நுனிநா அழுத்த
உள்மூச்சு உள்விட 
             செவ்விதழ் திறக்க
'மிழ்' என முடிக்கையில்
            உயிர்மூச்சு உள்வர
உச்சரிக்கும் பொழுதெலாம்
           தமிழ் எனக்கு உயிர் தருதே !